Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
புளியங்குடியில் தகர கூரையிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்தவா் அருணாசலம்(58). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த வியாழக்கிழமை தனது வீட்டின் தகர கூரையில் வேலை செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து அவருடைய உறவினா்கள் அருணாசலத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்தனா். அதன்பேரில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் மேற்பாா்வையில் அருணாசலத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அதன்படி, கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.