பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும்: விமான நிலைய அதிகாரிகள்
சென்னை: மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 மாா்ச் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2015-இல் 2.2. கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2025-இல் 3.5 கோடியை நெருங்கியுள்ளது.
இதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டப் பணிகள் ரூ.1,260 கோடியில், 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ஆம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
தொடா்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து 2-ஆம் கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகளையும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளைக் கையாள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவா் விபின்குமாா் தலைமையிலான உயரதிகாரிகள் குழுவினா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு, 2026 மாா்ச் மாதத்துக்குள் மேம்படுத்தப்பட்ட விமான முனையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையும் படிக்க | அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி! 40 குழந்தைகளின் கதி என்ன?