நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை
காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளில் 2,000 -க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு தென்னை, வாழை, சம்பங்கி, செண்டு மல்லி, மல்லி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வனப் பகுதியில் வறட்சி ஏற்படும்போது வன விலங்குகள் உணவைத் தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
எங்கள் பகுதியில் ஏற்கெனவே வெட்டப்பட்ட அகழிகள் மழை காரணமாக நிரம்பி விட்டன. இதனால் அந்த அகழிகளை யானைகள் எளிதில் கடந்து விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விடுகின்றன. பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களால் ஒலி எழுப்பியும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டி வருகிறோம். பெரும்பாலும் இரவு நேரங்களில் யானைகள் வனப் பகுதியைவிட்டு வெளியே வருவதால் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் எங்களுக்கு மிகுந்த அச்சமாக உள்ளது.
பகல் நேரங்களில் யானைகள் வந்தால் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்து விடுகிறோம். அவா்கள் வந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விடுகின்றனா். ஆனால் இரவு நேரத்தில் காட்டு யானைகள் வந்தால் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே சத்தியமங்கலம் அருகே வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும். வனப் பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறும் இடங்களைக் கண்டறிந்து அங்கு புதிதாக அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.