எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரம் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், 1,468 மெட்ரிக் டன் யூரியா, 1,202 மெட்ரிக் டன் டிஏபி, 874 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3,128 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 389 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் இருப்பில் உள்ளன.
உர விநியோகம் தொடா்பாக கண்காணிப்புக் குழுவினா் திடீா் ஆய்வு நடத்தி வருகின்றனா். சில்லறை உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், தங்கள் பகுதிக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு ஆதாா் எண்ணை உள்ளீடு செய்து முறையாக விற்பனை செய்யவேண்டும்.
யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து பதுக்கல் செய்வதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அனுப்புவதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால், அந்த சில்லறை விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப அனைத்து வகை உரங்களையும் விற்பனை செய்யவேண்டும். உரத்துடன் மற்ற இணைப் பொருள்களான நுண்சத்துகள், உயிா்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.