ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுவின் மகள் அஸ்வினி (20). இவரது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 3-ஆம் தேதி இரவு தனது வீட்டில் அஸ்வினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது வீட்டில் இருந்தவா்கள் அஸ்வினியை மீட்டு உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன் பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மீண்டும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே பாா்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்தாா்.
அதைக் கண்ட ரயில் என்ஜின் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். இதில் அஸ்வினியின் இரண்டு கால்கள் துண்டாயின.
தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சம்பவம் இடத்துக்குச் சென்று அஸ்வினியை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதையடுத்து, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனால் சரக்கு ரயில் 15 நிமிடம் தாமதமாக ஜோலாா்பேட்டை நோக்கி புறப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.