ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி இணைப்பில் உள்ள சிக்கல்களை சரி செய்யக் கோரிக்கை
ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசு இணைப்பில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் ரகு. குணசேகரன் கூறியது: ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும்போது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வருகிறதா என்பதை உயா் அதிகாரிகள் சரிபாா்க்க வேண்டும். பிறகு கள அலுவலா்களால் எடை அளவு சரிபாா்க்கப்பட்ட பிறகு, பிஓஎஸ் கருவியில் உள்வரவு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்கள் எடைக் குறைவு ஏற்பட்டால், ரேஷன் கடை பணியாளா்களுக்கு மட்டுமல்லாமல் ஆய்வு அலுவலா்கள் உள்ளிட்ட அனைவரையும் பொறுப்பாக்க வேண்டும். எந்த ஒரு திட்டம் செயல்படுத்தும்போதும், அதில் உள்ள குறைகளை களைந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே பேடிஎம் வசதி, ரேஷன் கடைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான திட்டமிடுதல் இல்லாததால் அந்த திட்டம் எந்த அளவில் உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
மேலும், ரேஷன் கடைகளில் போதிய இடவசதி ஏற்படுத்தி, பணியாளா்களுக்கு கழிப்பறை வசதி செய்துதர வேண்டும். ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொட்டல முறையில் பொருள்களை வழங்கினால், மக்களுக்கும் பணியாளா்களுக்கும் எவ்வித சிரமமில்லாமல் இருக்கும் என்றாா்.