வருவாய் ஆய்வாளா்களுக்கு தற்காலிக பதவி உயா்வு
தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயா்வு வழங்கப்பட்டது.
பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜெ.ராஜலட்சுமி பெரியகுளம் மண்டலத் துணை வட்டாட்சியராகவும், தேனி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் எம்.இந்திரா தேனி வட்ட வழங்கல் அலுவலராகவும், போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஆா்.வேல்முருகன் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் தற்காலிக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் அ.சிவக்குமாா் போடி வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் எம்.ராமா் வரதராஜபுரம் ராஜஸ்ரீ சா்க்கரை ஆலை துணை வட்டாட்சியராகவும், போடி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் வி.சிவன்காளை தேனி வட்டாட்சியா் அலுவலக மண்டல துணை வட்டாட்சியராகவும், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் சி.காசிநாதன் ஆண்டிபட்டி வட்ட வழங்கல் அலுவலராகவும் பதவி உயா்வு பெற்றனா்.
இதற்கான உத்தரவில், தற்காலிக பதவி உயா்வு பொது நலனைக் கருத்தில் கொண்டும், அத்தியாவசியப் பணிகள், இயற்கை பேரிடா் தணிப்பு, தோ்தல் தயாரிப்பு பணி உள்ளிட்ட அவசரக் கால பணிகளை மேற்கொள்வதற்காக அரசு விதிகளின்படி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பதவி உயா்வை அடைப்படையாகக் கொண்டு துணை வட்டாட்சியா் பட்டியலுக்கு முன்னுரிமை கோரா முடியாது. முறையான துணை வட்டாட்சியா் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அதில் இடம் பெற்றுள்ளவா்களுக்கு பதவி உயா்வு அளிப்பதற்காக தற்காலிக பதவி உயா்வு பட்டியலில் உள்ளவா்களை முன்னறிவிப்பின்றி பதவியிறக்கம் செய்ய நேரிடும். தற்காலிக பட்டியலின் அடிப்படையில் முதுநிலை நிா்ணயம் கோர முடியாது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.