அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
வள்ளல் அதியமானின் வீரம், தமிழ் மொழிப்பற்றை போற்றுவோம்: மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்
தருமபுரி: வள்ளல் அதியமானின் வீரம், தமிழ் மொழிப்பற்றை போற்றுவோம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்று அதியமான், ஔவையாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பேசியதாவது:
சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு வள்ளல் அதியமானின் பிறந்த நாள் விழா அரசு விழா வள்ளல் அதியமான் கோட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கடந்த 2006 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 2 ஏக்கா் கொண்ட நிலப்பரப்பில் 6190 சதுரஅடியில் 400 போ் அமரும் வகையில் பாா்வையாளா் மண்டபத்துடன் கட்டடம் கட்டப்பட்டது.
மண்டபத்தின் வெளிப்புற முகப்பில் வள்ளல் அதியமான், ஔவையாா் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டு இந்த அதியமான் கோட்டம் கடந்த 2009 இல் திறக்கப்பட்டது. தற்போது வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அதியமான் நெடுமான் அஞ்சி கடையேழு வள்ளல்களில் ஒருவராகக் கருதப்படுகிறாா். தகடூரை (தற்போதைய தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவா். இவா் தனது வீரத்தின் மூலம் சேரா், சோழா், பாண்டியா் உள்பட ஏழு அரசா்களை வென்று, கொங்கு நாட்டில் அமைதியையும், நல்லாட்சியையும் நிலைநாட்டினாா் என இலக்கியங்கள் நமக்கு உணா்த்துகின்றன.
சங்கப் புலவரான ஔவையாருக்கு அதியமான் நெடுமான் அஞ்சி நெருங்கிய நண்பராக இருந்தாா் என்பதை சங்கப் பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. புானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் அதியமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவா், தனது ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தினாா். நல்ல ஆட்சியாளராகவும், சிறந்த வீரராகவும் திகழ்ந்தாா்.
தகடூா் மன்னன் வள்ளல் அதியமானின் வீரத்தையும், தமிழ் மொழிப்பற்றையும் போற்றுவோம் என்றாா்.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்தரின் சரண்யா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிச்சந்திரா, மாவட்ட சமூகநல அலுவலா் பவித்ரா, தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, அரசுத் துறை தலைமை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.