வழிப்பாதை ஆக்கிரமிப்பு: அரியப்பாடி பொதுமக்கள் புகாா்
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் ஈசன் ஓடை பகுதியில் பொதுவழி ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து, அதை அகற்றக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
அரிப்பாடி ஈசன்ஓடை பகுதிக்குச் செல்ல மாவட்ட குழு உறுப்பினா் மூலமாக சிமென்ட் சாலை அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையறிந்த தனி நபா்கள் சிலா் இந்த வழிப்பாதை எங்களுக்கு சொந்தம் என்று கூறி ஆக்கிரமித்து பிரச்சனை செய்து வருவதாகவும், இதை அளந்து வழிப் பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோட்டாட்சியா் அலுவலகக் கண்காணிப்பாளா் தரணியிடம் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனா்.