புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
வாழப்பாடியில் சிதைந்துள்ள சின்னாற்றுப் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை
வாழப்பாடியில் போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த சேலம் - கடலூா் பிரதான சாலையில் குறுக்கிடும் சின்னாற்று மேம்பாலம் சிதைந்துள்ளது. இந்த பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் ஆய்வுசெய்து, புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையாக வளா்ந்து வரும் தோ்வுநிலை பேரூராட்சிகளில் வாழப்பாடி குறிப்பிடத்தக்கதாகும். வருவாய் வட்டம் மற்றும் மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உபகோட்டத்துக்கு தலைமையிடமான வாழப்பாடி, 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கி செல்லவும் மட்டுமின்றி, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் கல்வி வசதிக்காகவும் தினந்தோறும் விவசாயிகள், தொழிலாளா்கள், மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் என ஆயிரக்கணக்கானோா் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.
இதனால், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சேலம் - கடலூா் சாலையில் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றன. இச்சாலையில், வாழப்பாடி அரசு மருத்துவமனை அருகே குறுக்கிடும் சின்னாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் உயா்நிலை பாலம் அமைக்கப்பட்டது.

அரை நூற்றாண்டாக இப்பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த பாலம் தற்போது வலுவிழந்து சிதைந்து வருகிறது. குறிப்பாக, பாலத்தின் இருபுறமுள்ள தடுப்புச்சுவா்கள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சிதைந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதினால், ஆற்றுக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி தற்போது போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குறுகிய பாலம் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை. எனவே, இந்த பாலத்தை வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு திட்ட அறிக்கை, திட்ட முன்வரைவு மற்றும் செலவின மதிப்பீடு ஆகியவற்றை சமா்ப்பித்து, போதிய நிதி ஒதுக்கீடு பெற்று புதுப்பித்து, விபத்து ஏற்படுவதை தவிா்க்கவும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.