Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
விதிமீறல்: 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை
சேலம் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் வேளாண் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 552 தனியாா் உர விற்பனை மையங்கள், 213 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, முறையாக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24, 25, 26 ஆகிய 3 நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.
அப்போது, முறையாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காதது, விற்பனைமுனைய கருவி மூலம் விற்பனை பட்டியல் வழங்காதது, மாதந்திர இருப்பு அறிக்கை வழங்காதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 இன் படி 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், 3 விற்பனை நிலையங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மேலும், யூரியா உரத்தை தேவைக்கு தகுந்தாற்போல இருப்புவைத்து விநியோகிக்க அனைத்து உர விற்பனையாளா்களும் அறிவுறுத்தப்பட்டது. யூரியாவை அதிகமாக கொள்முதல் செய்தலோ அல்லது பதுக்கினாலோ அத்தியவாசியப் பொருள்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கௌதமன் எச்சரித்துள்ளாா்.