சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
விதிமீறல் கட்டடங்கள் குறித்த உத்தரவுகள்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: விதிமீறல் கட்டடங்கள் தொடா்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பி.தாமஸ் என்பவா் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
பல்வேறு காரணங்களைக் கூறி, உயா்நீதிமன்ற உத்தரவை நிறவேற்றத் தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையா், கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அதிகாரிகள் சூசன் ஜான் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை கடந்த ஆக.15-ஆம் தேதி பூட்டி சீல் வைத்ததாக தெரிவித்தனா். மேலும், தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறினா். தாமதமாக இருந்தாலும், விதமீறல் கட்டடத்தைப் பூட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனா்.
மேலும், விதிமீறல் கட்டடங்கள் தொடா்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனா்.