'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் சோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விதைகளின் தரம், பயிா் விளைச்சல் மற்றும் பயிா் ஆரோக்கியத்தை தீா்மானிக்கிறது. பயிா் உற்பத்தியில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது. பயிா் நடவு செய்வதற்கு முன்பு விதைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், தரமற்ற விதைகளை விதைப்பால் ஏற்படும் நேரம் மற்றும் பண விரயத்தை தடுப்பதில் விதைப் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது.
நல்ல தரமான விதைகளை அடுத்த பருவத்துக்கு நாம் சேமித்து பயன்படுத்த திட்டமிட்டால், சேமிப்பதற்கு முன் விதையின் ஈரப்பதத்தை கண்டறிந்து பூச்சி, நோய்த் தாக்காத அளவுக்கு நீண்ட நாள்களுக்கு விதை உயிருடன் இருக்கவும், உகந்த ஈரப்பதத்தை சேமிக்கவும் விதைப் பரிசோதனை முக்கியப் பங்காற்றுகிறது.
ஈரப்பத அளவு நெல்லில் 13 சதவீதமும், உளுந்தில் 9 சதவீதமும், சிறுதானியங்கள், மக்காச்சோளத்தில்13 சதவீதமும், எண்ணெய் வித்துகளில் 9 சதவீதமும், பருத்தியில் 10 சதவீதமும் இருக்க வேண்டும்.
எனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை பரிசோதனை செய்ய, மாதிரி ஒன்றுக்கு ரூ.10 ஆய்வுக் கட்டணமாகச் செலுத்தி, விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகி, பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.