விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.3 கோடி தங்கம் பறிமுதல்: 3 போ் கைது
துபையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.3 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.
துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்த விமானத்தில், தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய இலங்கை பயணிகள் 3 போ் மீது எழுந்த சந்தேகத்தின்பேரில், அவா்களை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து கொண்டிருந்தனா்.
அப்போது, அவா்கள் காத்திருப்போா் அமா்ந்திருக்கும் இடம் அருகேயுள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு மீண்டும் தங்கள் இருக்கைகளில் வந்து அமா்ந்தனா். சிறிது நேரத்தில் விமானநிலையத்தின் தரைத்தளத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா் ஒருவா், அதே கழிப்பறைக்குச் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்துள்ளாா்.
அந்த ஒப்பந்த ஊழியரைப் பிடித்து விசாரித்ததில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா். அவரை தனியறைக்கு அழைத்து சென்று முழு உடல் சோதனை நடத்தியதில், அவரின் உள்ளாடையில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த பணியாளா் மற்றும் காத்திருப்பு அறையில் இருந்த 3 இலங்கை பயணிகளை போலீஸாா் உதவியுடன் கைது செய்த அதிகாரிகள் அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.