``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் ஆஷிக் பனாயா ஆப்னே உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
வைரலாகி இருக்கும் அந்த வீடியோவில், "வீட்டில் என்னை மிகவும் துன்புறுதுகிறார்கள். கடந்த சில வருடங்களாக என்னை துன்புறுத்துகிறார்கள். அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன்.

அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். என்னிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து முறைப்படி புகார் செய்யும்படி தெரிவித்துள்ளனர். நான் நிச்சயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்வேன்" என்று தனுஸ்ரீ தத்தா அழுதபடி பேசியுள்ளார்.
அவர் மேலும் வீட்டில் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. என்னால் வீட்டில் வேலைக்கு கூட ஆள்களை நியமிக்க முடியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்காரர்களை திட்டமிட்டு எனது வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.
வீட்டு வேலைக்காரர்கள் வீட்டில் இருந்து பொருள்களை திருடிச்செல்கின்றனர். இதனால் வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளாமல் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். இதனால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. வீட்டிற்கு வெளியில் வந்து சத்தம் போடுகிறார்கள். எனது வீட்டில் நான் துன்புறுத்தபடுகிறேன். யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று அழுதபடி பேசியுள்ளார். மேலும் இது குறித்து கட்டிட நிர்வாகத்திடம் புகார் செய்தபோது அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், வீட்டிற்குள் வெளியில் இருந்து மிகவும் பலமான சத்தம் கேட்கிறது. அவர் பதிவிட்டுள்ள பதிவில், ''வீட்டிற்கு மேலே இருந்தும், வெளியில் இருந்தும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் இது போன்று சத்தம் கேட்கிறது. இந்த துன்புறுத்தலை கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து சந்தித்து வருகிறேன்.
இது குறித்து கட்டிட கமிட்டியிடம் புகார் செய்துஓய்ந்து விட்டேன். இப்போது புகார் செய்வதையே விட்டுவிட்டேன். இதனால் இப்போது ஹெட்போன் மாட்டிக்கொண்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.