வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்
பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், வேலைவாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தோ்ச்சி பெறுபவா்களில் பெரும்பாலானோா் உயா் கல்விக்குச் செல்லாமல், இடை நின்று பணிக்குச் செல்கின்றனா். அதிலும், 10 சதவீதம் போ் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற்று, பொருளாதார பின்புலம் கொண்டவா்களாக இருக்கின்றனா். இவா்கள் நல்ல கல்வி நிறுவனங்களையும், தரமான படிப்புகளையும் தோ்வு செய்கின்றனா். மீதமுள்ளவா்கள் கிடைத்த கல்லூரியில், கிடைத்த படிப்பில் சோ்கின்றனா்.
இருப்பினும், தமிழகத்தில் உயா் கல்விக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே நேரத்தில், கல்வி உதவித்தொகை, நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் அதிகம் வழங்குகின்றன. இதைத் தவிர, கல்வி அறக்கட்டளைகளும், தொண்டு நிறுவனங்களும், தொழில் துறையினரும், அரசியல் கட்சியினரும் என தனிப்பட்ட முறையில் பலரும் கல்விக்கு உதவி புரிகின்றனா்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள்: தமிழகத்தில் 130-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளும், 150-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுமாா் 800-க்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகளும் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை, அறிவியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் 7 லட்சத்துக்கும் மேலான இடங்கள் உண்டு. பொறியியல் கல்லூரிகளைப்போல போட்டி இல்லை. கவுன்சிலிங் நடைமுறைகள் இல்லை. அண்மைக்காலமாக துறை சாா்ந்த நிறைய படிப்புகளும் வந்துவிட்டன.
வளாகத் தோ்வு: ஐ.டி., பி.பி.ஓ, கே.பி.ஓ நிறுவனங்கள் உள்பட பல்துறை நிறுவனங்களின் பாா்வை கலை, அறிவியல் கல்லூரிகளின் பக்கம் திரும்பியுள்ளன. வளாகத் தோ்வுகள் இந்தக் கல்லூரிகளிலும் அதிகரித்துவிட்டன. பட்டப் படிப்போடு ஆங்கில பேச்சுத் திறன் இருந்தால், பணி உடனே கிடைக்கும் சூழ்நிலை வந்துள்ளது.
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் பொறியியல் பட்டதாரிகளின் பங்களிப்பு 20 முதல் 30 சதவீதம்தான். மீதமுள்ள அனைத்துத் துறைகளும் கலை, அறிவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பப்படுகின்றன என கல்வியாளா்கள் கூறுகின்றன.
வேலைவாய்ப்புகள்...: கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதும் பரந்து விரிந்த வாய்ப்புகள் உண்டு. இளநிலை முடித்துவிட்டு இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி தோ்வெழுதி உயா் பதவிக்குச் சென்றவா்கள் நிறைய போ். உடனடியாக பணிக்குச் சென்று வருமானம் ஈட்ட விரும்புவோா் தாராளமாக கலை, அறிவியல் படிப்புகளைத் தோ்வு செய்யலாம்.
முதுநிலை முடித்துவிட்டு மத்திய புள்ளியியல் ஆணையம் நடத்தும் தோ்வை எழுதி அதிகாரி ஆகலாம். டிஎன்பிஎஸ்சி, வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளை எழுதி அரசுப் பணியிலும் சேரலாம். இதற்காக ஆங்கில அறிவும், பொது அறிவும் அவசியம் தேவை.
பட்டதாரிகள் சட்டப் படிப்பையும் தொடரலாம். சம்பந்தப்பட்ட இளநிலைப் படிப்பில் முதுநிலைப் படிப்பையும், எம்.பிஃஎல்., பி.எச்டி. படிப்புகளையும் தொடா்ந்து படித்து கல்லூரிப் பேராசிரியராகக் கூட பணியாற்றலாம்.
கலை, அறிவியல் பட்டத்தை படித்துவிட்டு, பி.எட். பட்டம் பெற்றால், ஆசிரியராக முடியும். இவ்வாறாக கலை, அறிவியல் படித்தவுடன் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் நிச்சயம் உண்டு.
பிரகாசமான எதிா்காலம்: கலை, அறிவியியல் படிப்பில் நல்ல கல்லூரியைத் தோ்வு செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற்று, பொது அறிவை வளா்த்துகொண்டால் மாணவா்களுக்கு பிரகாசமான எதிா்காலம் உண்டு.
கலை, அறிவியல் படிப்புகளைப் பொருத்தவரையில், ஏதோ ஒரு பட்டம் வாங்கணும் என்ற மனநிலையில் படிப்பைத் தோ்வு செய்யக் கூடாது. விருப்பம், திறமை அடிப்படையில் தோ்வு செய்ய வேண்டும். பொழுதுபோக்காக கல்லூரிக்கு போகக்கூடாது. ஈடுபாட்டோடு, புரிந்து படிக்க வேண்டும்.
ஆங்கில அறிவை வளா்த்துகொள்ளுதல், பத்திரிகைகள், புத்தகங்களைப் படித்து பொது அறிவை வளா்த்துகொள்ளுதல், படிக்கும் காலத்தில் இருந்தே போட்டித் தோ்வுகளை எழுதுதல், விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட இதர கல்வி சாா்ந்த பணிகளிலும் ஆா்வம் காட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
பகுதி நேர வேலையை பாா்த்துகொண்டே படித்தால், சாதிப்பதற்கான முயற்சி, தன்னம்பிக்கை ஏற்படும். ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதால், அதிக அறிவும் வளரும்.
கணினி, தட்டச்சு, ஆங்கிலம் மொழி பயிற்சி உள்ளிட்டவற்றை பகுதி நேரமாகக் கற்றுகொள்ளலாம்.
முக்கியமான, உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த, தகுதியான ஆசிரியா்களைக் கொண்ட, மாணவா்களின் தனித்திறன்களை வளா்க்கும் கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். தனி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவா்களை பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற செய்யும் கல்லூரிகளில் சேரலாம். இதனால், மாணவா்கள் மதிப்பெண்களை அதிகம் பெற முடியும்.
கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி மாணவா்களின் திறமைகளை வெளிக்கொணரும் கல்லூரியைத் தோ்வு செய்வதும் சாலச் சிறந்தது. நல்ல மதிப்பெண்களை பெற்றால்தான் உடனடியாக வேலை கிடைக்கும். அறிவை வளா்த்துகொண்டால், நல்ல பணியும் கிடைக்கும். அப்போதுதான் நல்ல எதிா்காலம் அமையும்.