இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது
தஞ்சாவூரில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு விரைவு பேருந்தை நாகை சாலை தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் வழிமறித்த 2 போ் பேருந்து வேகமாக ஓட்டுவதாகக் கூறி தகராறு செய்து, ஓட்டுநரான தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த வேல்முருகன் (44), நடத்துநரான திருவாரூரைச் சோ்ந்த சீனிவாசனை (45) தாக்கினா்.
தகவலறிந்த சென்ற போக்குவரத்துக் கழக அலுவலா்கள் ஓட்டுநா் வேல்முருகனை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மாற்று ஓட்டுநா் மூலம் பேருந்து சென்னைக்கு சென்றது. பேருந்தில் பணியைத் தொடா்ந்த ஓட்டுநா் சீனிவாசனின் முகம் வீங்கியதுடன், காதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. இதையடுத்து இவா் செங்கல்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் அளித்த புகாரின் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியதாகக் கூறி, சிஐடியு பணிமனைக் கிளைத் தலைவா் பரத்வாஜ் தலைமையில் மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே தொல்காப்பியா் சதுக்கம் பகுதி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மோத்திரப்ப சாவடியைச் சோ்ந்த சகோதரா்கள் அருள்தாஸ் (27), பாலமுருகனை (19) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.