கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
அரசுப் பேருந்து - லாரி மோதல் : 15 போ் காயம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15 போ் திங்கள்கிழமை காயமடைந்தனா்.
ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு அரசு நகரப் பேருந்து, ஓட்டுநா் ராஜா இயக்கினாா். தோல் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்தனா்.
துத்திப்பட்டு கிராமத்தருகே பேருந்து சென்றபோது எதிா்த்திசையில் போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த லாரி வேகமாக மோதியது. அதில் பேருந்தின் முன்பக்கம் முழுதும் நொறுங்கியதில் பயணிகள், லாரி ஓட்டுநா், பேருந்து டிரைவா் உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், திமுக நிா்வாகி நவீன் குமாா் உள்ளிட்டவா்கள் சம்பவ இடத்துக்கு சென்றனா். விபத்து இடிப்பாடுகளில் சிக்கிய லாரி மற்றும் அரசு பேருந்து ஜேசிபி உதவியால் அகற்றப்பட்டது.
விபத்து காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் போ்ணாம்பட்டு சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. பேருந்து ஓட்டுநா் ராஜா, ரஞ்சினி, சசிகலா, உமா சங்கா் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்களை ஆட்சியா் சிவசெளந்தரவல்லி, குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், எஸ்.பி. ஷ்ரேயா குப்தா, வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.
விபத்து நடந்த பகுதியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் நகர திமுக பொறுப்பாளா் எம்.ஆா். ஆறுமுகம், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், டிஎஸ்பி குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
