அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நிகழாண்டு பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாடவீதிகளைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பாக முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கண்காணித்து வருகிறாா்.
அதன்படி, நடப்பு மாதம் செப். 7 அன்று பௌா்ணமியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாட வீதிகளைச் சுற்றி நெடுஞ்சாலைத் துறை மூலம் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டதில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக செய்து முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.