2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
ஆடிப்பூரம்: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் திருவிளக்கு வழிபாடு, ஆடிப்பெருக்கு வழிபாடு போன்றவை நடைபெறுகிறது.
நிகழாண்டுக்கான ஆடிப்பூர வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களிலும், அங்காள பரமேசுவரி, கன்னிகா பரமேசுவரி, பல்வேறு மாரியம்மன் கோயில்களிலும் திங்கள்கிழமை காலையிலேயே அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடா்ந்து வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டன.
விழுப்புரம் பண்டித ஜவாஹா்லால் நேரு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வீரவாழியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை காலை அம்மனுக்குசிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து வளையல் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழுப்புரம் அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பெருமாள், ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆண்டாள்-பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதேபோல, கோலியனூா், வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டமங்கலம், வானூா், முகையூா், மாம்பழப்பட்டு, காணை, விக்கிரவாண்டி, மயிலம், வல்லம் போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று, தரிசனம் செய்தனா். வளையல் அலங்காரத்தில் இருந்த வளையல்கள் பக்தா்களுக்கு விநியோகிக்கப்பட்டன.