ஆபரேஷன் சிந்தூர் மாணவியின் அவதூறு கமெண்ட்; `தேச நலனை எப்படி பாதித்தது?' - நீதிபதிகள் கேள்வி
பூனேவில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசுக்கு எதிராகப் பதிவிட்டிருக்கிறார்.
அதனால், அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன், போலீசாரும் அந்த மாணவியை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அந்த மாணவிக்கு தற்போது தேர்வு நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கவுரி வி.கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேசன் விசாரித்தனர்.

அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம், "என்ன இது? நீங்கள் ஒரு மாணவியின் வாழ்க்கையை அழிக்கிறீர்களா? என்ன நடவடிக்கை இது? ஒருவர் ஒன்று கூறுவதால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையை அழித்துவிடுவீர்களா? அந்த மாணவியை நீங்கள் எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்? நீங்கள் எதாவது விளக்கத்தை அவரிடம் இருந்து பெற்றீர்களா? அந்த மாணவி குற்றவாளி அல்ல.
கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன? பாடங்கள் மட்டும் தான் கற்று கொடுப்பீர்களா? நீங்கள் மாணவியை சீர்திருத்த வேண்டுமா அல்லது குற்றவாளி ஆக்க வேண்டுமா? நீங்கள் மாணவியை தேர்வு எழுதுவதில் இருந்து நிறுத்தக்கூடாது. அவர் மீதமுள்ள மூன்று தேர்வுகளையும் எழுதி முடிக்கட்டும். அவரை தேர்வு எழுதுவதில் இருந்து நிறுத்தவும் கூடாது. போலீசார் கூட வர வேண்டும் என்று கூறவும் கூடாது" என்று கூறினார்கள்.

'தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கல்லூரி நிர்வாகம் வாதாடியது. அதற்கு நீதிபதிகள், "எது தேச நலன்? இந்த வயதில் தான் தவறு செய்வதும், திருத்தி கொள்வதும் நடக்கும் வயது. ஏற்கெனவே மாணவி போதுமான விளைவுகளை சந்தித்துவிட்டார். மாணவியில் கமென்ட் எப்படி தேச நலனை பாதிக்கும்? அவரை குற்றவாளியை போல நடத்துகிறீர்கள். அவர் தான் செய்தது தவறு என்று கூறி, அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார். அவரை நீங்கள் சீர்திருத்த வேண்டும். அவருக்கு உதவ வேண்டுமா அல்லது அவரை குற்றவாளி ஆக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், மாணவியை சிறையில் இருந்து விடுவித்தது நீதிமன்றம்.