ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஷமீல் அகமது உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் தரப்பில் புகார்ச் சொல்லப்பட்டதால், இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் உட்பட 7 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனாலும், 2015 ஜூன் 27-ம் தேதி 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வன்முறை கலவரத்திலும் ஈடுபட்டனர். வாகனங்கள் சூறையாடப்பட்டன; போலீஸார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தியதால், போராட்டக்காரர்கள் போலீஸாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 15 பெண் போலீஸார் உட்பட 91 பேர் படுகாயமடைந்தார்கள்.
30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் உட்பட ஏராளமான பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. நீண்ட முயற்சிக்குப் பிறகே, போலீஸார் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் தொடர்புடைய 191 பேர் மீது 12 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (28-8-2025) ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் நிலவிய பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, இன்று மதியம் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 191 பேரில், 161 பேர் (இறப்பு உட்பட) விடுதலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள். 22 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அஸ்லம் பாஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.