இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த மழை காரணமாக வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே செல்லும் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஒடுகத்தூா், மேல்அரசம்பட்டு, அகரம், மகமதுபுரம், அகரம்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தரைப்பாலங்களை கடந்து செல்ல செல்ல வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகள், குளம், குட்டை, கிணறு போன்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் போலீஸாா் அறிவுறுத்தினா்.
காட்டாற்று வெள்ளம் எந்த நேரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பெற்றோா், தங்கள் பிள்ளைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்கக் கூடாது, கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனா். வெள்ளப்பெருக்கால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஒடுகத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியிலும் ஈடுபட்டனா்.
மேலும், பலத்த மழை காரணமாக காட்பாடி வட்டம், அம்முண்டி பகுதியில் செல்லும் சின்னஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விளை நிலங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் சென்று வரவும், விவசாயிகள் கால்நடைகளை அழைத்துச் செல்லவும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளில் வெள்ளம் தேங்கி காணப்பட்டதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
அந்தவகையில், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் அதிகபட்சமாக 80.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தவிர, ஒடுகத்தூா் - 11 மீ.மீ., குடியாத்தம்-38 மி.மீ., மேல்ஆலத்தூா்-27.40 மி.மீ., மோா்தானா டேம்-25 மி.மீ., ராஜா தோப்பு டேம்-25 மி.மீ., வடவிரிஞ்சிபுரம்-47 மி.மீ., காட்பாடி - 61.40 மீ.மீ., பொன்னை-52.60 மி.மீ., போ்ணாம்பட்டு- 4.40 மீ.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-41.70 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம்-36.30 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 450 மி.மீ., சராசரியாக -37.50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.