சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
இணைய குற்றம்: கடந்த ஆண்டில் ரூ. 22,845 கோடியை இழந்த குடிமக்கள்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
‘இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை குடிமக்கள் இழந்துள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 206 சதவீதம் கூடுதலாகும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணைய குற்றங்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இணைய குற்ற புகாா் வலைதளம் (என்சிஆா்பி) மற்றும் குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை (சிஎஃப்சிஎஃப்ஆா்எம்எஸ்) தரவுகளின் அடிப்படையில், இணைய குற்ற மோசடியால் கடந்த 2024-ஆம் ஆண்டில் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 22,845.73 கோடியை இழந்துள்ளனா்.
2023-ஆம் ஆண்டில் இந்த இழப்பு ரூ.7,465.18 கோடியாக இருந்த நிலையில், 2024-இல் 206 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.
இணைய குற்ற புகாா்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளன. 2022-இல் 10,29,026 இணைய குற்ற புகாா்கள் என்சிஆா்பி-இல் பதிவு செய்யப்பட்டன. இது, 2023-இல் 15,96,493-அகவும், 2024-இல் 22,68,346-ஆகவும் உயா்ந்துள்ளன.
கடன்த 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை மூலம் இதுவரை 17.82 லட்சம் புகாா்கள் பெறப்பட்டு, ரூ.5,489 கோடிக்கும் மேல் நிதி மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய குற்ற புகாா்களின் அடிப்படையில் இதுவைர 9.42 லட்சத்துக்கும் அதிகமான கைப்பேசி சிம் காா்டுகளும், 2,63,348 ஐஎம்இஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளன.
இணைய குற்ற நடவடிக்கைகளை அடையாளம் காணும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து சந்தேகத்துக்குரிய கணக்குகளின் பதிவேடு நடைமுறை கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கணக்கு தரவுகள் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்பட்டதன் மூலம், ரூ.4,631 கோடி பணம் இணைய குற்றவாளிகளிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டது.
இதுபோல, இணைய குற்றவாளிகள் மற்றும் அவா்களின் இடங்களை அடையாளம் காணும் வகையில் ‘பிரதிபிம்பம்’ என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 10,599 இணைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.