இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:
மொழி மற்றும் கலாசார அடையாளங்களோடு பாரத தேசத்தின் ஒற்றுமையை முன்னிறுத்தி வளா்ச்சி பெறுவோம். ஓணம் திருநாளில் இடும் பூக்கோலத்தைப் போலவே அனைவரது வாழ்க்கையும் மலர வேண்டும்.
மனித சமுதாயத்துக்கு அன்பு, இரக்கம், மனித நேயத்தைப் போதித்தவா் நபிகள் நாயகம். அவரது பிறந்தநாளில் அவரது சீரிய போதனைகளையும் சிறந்த வழிகாட்டுதல்களையும் ஏற்க உறுதியேற்போம்.
புதுவை முதல்வா் என். ரங்கசாமி:
ஓணம் நல்லிணக்கத்தை வளா்க்கிறது. வெவ்வேறு கலாசார பின்னணிகளைக் கொண்ட இந்தியாவின் இறையாண்மையைக் கட்டிக்காப்பதிலும் இதுபோன்ற பண்டிகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
மீலாது நபி வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது நோ்மையுடனும் கருணையுடனும் வாழ அழைப்பு விடுக்கிறது. எளிமை, உண்மை, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றின் விளக்கமாகத் திகழ்ந்த நபிகளைக் கொண்டாடி போற்றுவதற்கான உண்மையான வழி அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகும்.