இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்தவா் விஜய். இவரது மனைவி அபிராமி. இவா்களுக்கு 6 வயது மகன், 4 வயது மகள் இருந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டு அபிராமிக்கும் அதே பகுதியில் பிரியாணி கடையில் பணிபுரிந்த மீனாட்சிசுந்தரம் என்பவருக்கும் இடைய தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு இரு குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்றாா். இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் காஞ்சிபுரம் மகளிா் நீதிமன்றம், அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஜூலை 24-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அபிராமி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.