இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்தவா்கள் முனியாண்டி மகன் பாண்டி (25), விவேகானந்தன் மகன் ஆகாஷ் குமாா் (20). இவா்கள் இருவரும் போடி பிச்சாங்கரை மலை கிராமத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்காக திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
இந்த நிலையில், குரங்கணி மலைச் சாலையில் இரண்டாவது வளைவு அருகே சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த மழைநீா் சேமிப்புத் தொட்டியின் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்துடன் அந்தத் தொட்டிக்குள் விழுந்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.