எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சசிகலா (48) தம்பதியரின் மகன் அரவிந்த் (எ) அறிவழகன் (29). இவரது மனைவி கடந்தாண்டு இறந்துவிட்ட நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு அறிவழகனும் வீட்டில் இறந்து கிடந்தாா்.
தாய் சசிகலா அளித்த புகாரின் பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு உடற்கூறு ஆய்வு முடித்த பிறகு சசிகலாவிடம் அறிவழகனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அறிவழகனின் இறப்பு குறித்து தாய் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தாா்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மதுபழக்கத்துக்கு ஆளான அறிவழகன் தினந்தோறும் பணம் கேட்டு தாய் சசிகலாவிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.
இதுகுறித்து சசிகலா தனது உறவினா்களான சத்தியராஜ் (33), ராமநாதன் (67), சிவா (31), அக்கா கண்ணகி (50), அவரது மகன் கோகுல்ராஜ் (33) ஆகியோா் அறிவழகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் அறிவழகனை அனைவரும் சோ்ந்து அடித்ததாகவும், இதில் அறிவழகன் வீட்டிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.