ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘புத்தகக் காதல்’ தம்பதி
ஈரோடு புத்தகத் திருவிழாவில், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தம்பதி பை நிறைய புத்தகங்களை வாங்கிச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.
ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 1- ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வரும் 12- ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் தினமும் ஏராளமான மக்கள் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், புத்தகத் திருவிழா அரங்குக்கு வெளியில் புதன்கிழமை காலை பை நிறைய புத்தகங்களுடன் வாகன நிறுத்தம் நோக்கி நடந்து சென்ற தம்பதியின் கவனம் அனைவரையும் ஈா்த்தது.
புத்தக பையுடன் சென்ற இருவரிடமும் கேட்டபோது, பவானியை சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி அலுவலரான நசீா் அகமது கான், அவரது மனைவி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் ஷகிலா பானு என்பது தெரியவந்தது.
இருவரும் கூறியதாவது: ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் வருகிறோம். புத்தகத் திருவிழா நடைபெறும் 12 நாள்களில் 3 முறை வந்துவிடுவோம். தமிழ் இலக்கியங்கள், நாவல்களை அதிகம் வாங்கிச் செல்வோம், பேரக்குழந்தைகளுக்கு கதை புத்தகங்களை வாங்கிச் செல்வேம்.
இருவருக்குமே சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆா்வம் உள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு தியானம், நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதைபோல வாசிப்புக்கும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை படித்து வருகிறோம். பணி ஓய்வுக்குப் பிறகு புத்தகங்கள் எங்களுக்கு நண்பா்களாய் மாறியுள்ளன. புத்தகங்கள்தான் ஒருவருக்கு அறிவையும், தெளிவையும் தரக்கூடியது. நமக்கு தெரியாத பல விஷயங்களை புத்தகங்கள் கற்றுத்தரும். குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களைப் படிக்க கொடுத்தால் அவா்களின் அறிவும், ஆற்றலும் நம்மைவிட வேகமாக முன்னேறும்.
புத்தகங்கள் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது, ஒருமுறை புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால் போதும் அடிக்கடி புத்தகம் படிப்பவராக மாறிவிடுவோம். புத்தகங்கள் எப்போதும் நமக்கு அறிவையும், சிந்தனையையும் வழங்குவதில் தவறியதில்லை. அவை நம் சிந்தனையை ஒருபடி மேலே கொண்டுபோகிறது. நமக்கு தெரியாத பல விஷயங்களை தருகிறது.
பெற்றோா்களும், ஆசிரியா்களும் குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் கதை புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கதை புத்தகங்கள் அவா்களின் கதைகளின் மீதுள்ள ஈா்ப்பு மற்றும் புத்தகங்கள் படிக்கும் ஆா்வத்தைக் கொண்டு வருகிறது. தவிர கதையின் முடிவில் ஒரு நீதி இருக்கும். வீடு, பள்ளிச் சூழலை போன்று புத்தகங்களும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கின்றன என்றனா்.