ஈரோடு: வயதான தம்பதி கொலை வழக்கு; விசாரணை திடீர் மாற்றம் - பின்னணி என்ன?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் 100 நாள்களைக் கடந்தும் கொலையாளிகள் பிடிபடாததால், தனிப்படையிடமிருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி-பாக்கியம்மாள் கடந்த மே மாதம் 1-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதில், பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலிக் கொடி, வளையல் என 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த இரு கொலை சம்பவங்களும் மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். சிவகிரி கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, 60 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.மேலும் நீலகிரி,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவலர்கள் உதவியுடன் பெருந்துறை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வயதானவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
மேலும், இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் வாய்க்கால் கரையோரம் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். புதிதாக சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களையும் சந்தேக நபர்களையும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதியை அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவர் கொலை செய்தததுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை உருக்கிய ஞானசேகரன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்லடம் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்த மூவர் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.

விசாரணை அதிகாரி மாற்றமும் சந்தேகங்களும்...: இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தனை விசாரணை அதிகாரியாக மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். " கடந்த 2022-இல் சென்னிமலை உப்பிலிபாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியான துரைசாமி-ஜெயமணி மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடைபெற்றது. இதில், துரைசாமி உயிரிழந்தார். தொடர்ந்து, 2023-இல் ஒட்டன்குட்டை களியாங்காட்டு தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதியான முத்துசாமி-சாமியாத்தாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த இரு வழக்குகளிலும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளிலும் விசாரணை அதிகாரியாக பெருந்துறை துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உதகையைச் சேர்ந்த 5 பேர், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 3 பேர், திருப்பூரைச் சேர்ந்த 2, தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆனால்,சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும், உப்பிலிபாளையம் மற்றும் ஒட்டன்குட்டையில் நடைபெற்ற இரு கொலை சம்பவங்களிலும் ஈடுபட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்படியிருக்க ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 11 பேர் யார்?எதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அப்போது, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்து தற்போது மேற்கு மண்டல டிஐஜியாகப் பணியாற்றும் சசிமோகன் துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான், சிவகிரி இரட்டைக் கொலை விசாரணை அதிகாரியாக இருந்த துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் அதிலிருந்து விடுக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் கேட்டபோது, "வயதான தம்பதி கொலை வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார். சிவகிரி கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக முதல்வரிடம் பாராட்டு பெற்ற சில நாள்களிலேயே விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஈரோடு காவல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.