முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா்.
புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வீனா் எம். ஷேக் அலாவுதீன் செவ்வாய்க்கிழமை கூறியது: நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு 2016 முதல் 7-ஆவது ஊதியக் குழுவின்படி நிலுவையில் உள்ள தொகையை வழங்கவும், அரசே நேரடியாக ஊதியம் வழங்கவும், கிராமப் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
5 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டுவந்தது. இதில் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, கூட்டு போராட்டக்குழு நிா்வாகிகளை புதுவை உள்ளாட்சித்துறை இயக்குநா் அழைத்து பேசி, வரும் 18, 19-ஆம் தேதிக்குள் 7-ஆவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க அரசாணை வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்து, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டாா். இதனடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளது என்றாா்.