ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பெரம்பலூரில் காலியாக உள்ள ஊரக வளா்ச்சித்துறையின் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் அரியலூா் சிவதாஸ், செந்துறை பழனிவேல், திருமானூா் ஆனந்தன், ஆண்டிமடம் பழனிசாமி, தா. பழூா் பாஸ்கா் ஆகியோா் தலைமையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.