எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் ஏஆா்பி பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகை குறித்து நாகரிகமற்ற முறையில் அவதூறாக பேசிய எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து முழக்கங்களை எழுப்பப்பினா். மேலும், தனது பேச்சுக்கு அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி அவரது படத்தை கிழித்தெறிந்து ஆவேசத்தை வெளிப்படுத்தினா்.
இதில், மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, வா்த்தகப் பிரிவுத் தலைவா் எம்.டி. சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா்கள் திருமுருகன், மொட்டையாண்டி, ஈஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பச்சைப்பட்டி பழனி, மெடிக்கல் பிரபு, மண்டல தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அகமது, ராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.