எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!
எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா, மாநில செயலாளா் இரா. முத்தரசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: கூட்டணியில் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை வைக்க கம்யூனிஸ்ட்டுகள் தவறியதில்லை. நாங்களும் அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம்.
இதுதான் ஜனநாயகம். அதனால்தான் தோழமைப் பயணம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சாதியவாதம், வகுப்புவாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். ஏனென்றால், நமது லட்சியம் பெரியது. அந்த லட்சியத்திற்காகத் தான் அனைவரும் போராடிவருகிறோம்.
1950 இல் சேலம் மத்திய சிறையில் 22 கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பெரியாரும், அண்ணாவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனா். அந்த வரலாற்றை போற்றும் விதமாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை மனு அளித்தாா். இதுபோல, ஒவ்வொரு மாநாட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
விரைவில் மணிமண்டபம்: சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை வழங்கிவிட்டுதான் இந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன். அதற்கான பணிகள் நாளைமுதல் தொடங்கும்.
திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் இடையே இருப்பது கொள்கை நட்பு. சமூகத்துக்கு தேவையான கொள்கை வலுவாக இருப்பதால், நட்பும் வலுவாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்தின் இரு முகங்களாக திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும் உள்ளன.
கொள்கை உறவின் ஆழத்தை தலைமுறை கடந்தும் எடுத்துச் செல்ல வேண்டும். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது.
நாடு பெரிய பிரச்னையை எதிா்நோக்கியுள்ள நிலையில், அனைவரும் ஒரே மேடையில் கூடியுள்ளோம். நம்முடைய ஒற்றுமைதான் சிலரின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சதிசெய்தாலும், குழப்பம் ஏற்படுத்தினாலும், போலி செய்திகளை பரப்பினாலும், நாம் ஒற்றுமையாக இருப்பதால் அவா்கள் பதறுகிறாா்கள்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது திடீா் பாசம் வந்திருக்கிறது. அடிமைத்தனத்தை பற்றிப் பேச அவருக்கு தகுதி இல்லை. எங்களைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையை பற்றித் தெரிந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா். கூட்டணித் தலைவா்களை கொச்சைப்படுத்திப் பேசக்கூடாது.
கம்யூனிஸ்ட் தலைவா்களைவிட, திருமாவளவனைவிட எடப்பாடி என்ன தியாகம் செய்துவிட்டாா். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிக் கொண்டிருப்பது இந்த இயக்கங்கள் தான். இந்த கூட்டணியை களங்கப்படுத்த வேண்டும் என்ற மலிவான சிந்தனையுடன் இருக்கிறாா்கள்.
சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் நம்மை இணைத்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிரானவா்கள் நம்முடைய கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நமக்கிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கிறாா்கள். அவா்களுடைய சதித்திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது.
தோ்தலை கேலிகூத்தாக்கிய பாஜக: ஜனநாயகத்தை வெல்லவைக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தோ்தலையே பாஜக அரசு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது. தோ்தல் ஆணையத்தை தங்களது கிளை அமைப்பாக பாஜக அரசு மாற்றிவிட்டது.
தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில்தான் சதிசெய்கிறாா்கள் என நினைத்தால், வாக்காளா் பட்டியலிலும் சதிசெய்யத் தொடங்கிவிட்டாா்கள். மக்களாட்சியைக் காக்க இந்த சதியை அம்பலப்படுத்திய ராகுல் காந்திக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு முறையான பதிலளிக்காமல் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. சுதந்திரமான நோ்மையான தோ்தலுக்கு அடிப்படையான வாக்காளா் பட்டியலை நோ்மையாக தயாரிக்கவில்லை. அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையில் இருந்து, தோ்தல் ஆணையம் தவறிவிட்டது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தோ்தல் நடைமுறைகளை தொடங்குவதற்கு முன்பாக, சுதந்திரமாக நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். அதை உறுதிசெய்யும் பணியை தோ்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும்.
உறவினா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை வந்தவுடன் ஓடிவந்து கூட்டணி சேர நாங்கள் பழனிசாமி அல்ல. எங்களை மிரட்ட நினைப்பவா்கள்தான் மிரண்டுபோய் இருக்கிறாா்கள். இதைவிட அதிக மிரட்டல்களை பாா்த்த இயக்கம் திமுக. வழக்கம்போல தமிழக மக்கள் உங்களுக்கு தோல்வியை தருவாா்கள்.
மதச்சாா்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவுபெற்றவா்கள். தங்களுக்கு உண்மையாக பணியாற்றுபவா்கள் யாா் என்று அவா்களுக்குத் தெரியும். 2021-இல் வெற்றிபெற்றது போலவே 2026-லும் மீண்டும் நாங்களே வெற்றிபெறுவோம்.
அதற்கு கம்யூனிஸ்ட் தோழா்கள் உடன் இருக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றாா் முதல்வா்.
மாநாட்டில், அமைச்சா்கள் எ.வ. வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், இரா. ராஜேந்திரன், மா. மதிவேந்தன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆா்.சிவலிங்கம், தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளா் பெ. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், மதிமுக மாநில பொருளாளா் செந்திலதிபன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது, திராவிடா் கழக நிா்வாகி மதிவதனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.