எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு
நமது நிருபா்
இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து எட்டாவது நாளாக சரிவில் முடிவடைந்தன.
அமெரிக்கா-இந்தியா இரு தரப்பு வா்த்தகத்தை இரட்டிப்பாக்கி 500 பில்லியன் அமெரிக்க டாலா்களாக உயா்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘மிஷன் 500’ என்ற இருதரப்பு வா்த்தகத்திற்கான புதிய இலக்கை பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பும் நிா்ணயித்துள்ளனா். இது சந்தைக்கு சாதகமாக பாா்க்கப்பட்டதால் உள்நாட்டு சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது.
ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது முன்னணி முதல் தரப் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதனால், வங்கிகள், நிதித்துறை, ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப்பட்டியலில் வந்தன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் 200 புள்ளிகள் இழப்பு: சென்செக்ஸ் காலையில் 250.02 புள்ளிகள் கூடுதலுடன் தொடங்கி அதிகபட்சமாக 76,483.06 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 75.439.64 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 199.76 புள்ளிகள் (0.26 சதவீதம்) இழப்புடன் 75,939.21-இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 699.33 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,083 பங்குகளில் 681 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமமய், ,3,320 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 82 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
அதானிபோா்ட்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ் 4.20 சதவீதம் குறைந்த வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர அல்ட்ராடெக்சிமெண்ட், சன்பாா்மா, இண்டஸ்இண்ட்பேங்க், என்டிபிசி, டாடாஸ்டீல் உள்பட 21பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், நெஸ்லே, ஐசிஐசிஐபேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்டெக், பாா்தி ஏா்டெல், ஐடிசி, ரிலையன்ஸ், மாருதி ஆகிய 9 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.05 புள்ளிகள் கூடுதலுடன் 23,096.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,133.70 வரை மேலே சென்றது. பின்னா், 22,774.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 102.15 புள்ளிகள் (0.44 சதவீதம்) இழப்புடன் 22,929.25-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 41 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
ஒரே நாளில் நஷ்டம்
ரூ.6.93 லட்சம் கோடி!
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.6.93 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.407.12 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.6.93 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) இந்த மாதத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் ரூ.24,88.74 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) மொத்தம் ரூ.21,655.20 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
+