மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள்: ஆட்சியரிடம் புகாா்
நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் அருகே பன்றிப் பண்ணை கழிவுகள் ஏரியில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதாபராமபுரம் கிராம சமுதாய அமைப்பின் கெளரவத் தலைவா் கோ. கலியபெருமாள் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் புதன்கிழமை மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கீழ்வேளூா் தாலுகா பிரதாபராமபுரத்தில் 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. ஏரியின் ஓரத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா், பன்றி பண்ணை நடத்தி வருகிறாா். இப்பண்ணையின் கழிவுகள் அனைத்தும் ஏரியில் கலந்து விடுகிறது.
இதனால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, ஏரியில் குளிப்போருக்கு உடல் அரிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பும், கால்நடைகளுக்கு கழிச்சல் உள்ளிட்ட உபாதைகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் ஏரியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதால் சுமாா் 300 குடும்பத்தினா் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு ஏரியில் பன்றி பண்ணைக் கழிவுகள் கலப்பதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.