ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்த பாபு மகன்கள் தனுஷ் (8), ஹரிமோனிஷ் (6). இவா்கள் இதே கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 4, 2-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோா் அதே கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குச் சென்று உடைகளை கழற்றி கரை மீது வைத்துவிட்டு, நீரில் இறங்கி குளித்துள்ளனா். அப்போது, ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ால், இருவரும் நீரில் மூழ்கினா்.
ஏரிக் கரையில் சிறுவா்களின் உடைகள் கிடப்பதைப் பாா்த்த அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கலசப்பாக்கம் போலீஸாா், கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய சிறுவா்கள் தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோரை நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலங்களாக மீட்டு, உடல்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.