கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடை
பென்னாகரம்/ மேட்டூா்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 98,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடியாகவும், இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது.
நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் அருவிகள் நீரில் மூழ்கின. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கும் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தடைவிதித்துள்ளாா்.
இந்த தடை உத்தரவினால் பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுலா வாகனங்களைத் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனா். மேலும், காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமையில் வருவாய்த் துறையினா் அடங்கிய குழுவினா் ஆலம்பாடி, ஊட்டமலை, சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி, தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பெட்டிச் செய்தி...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து
1.10 லட்சம் கனஅடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை இரவு விநாடிக்கு 1,10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பால் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1,10,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 18,000 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 92,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும நீடிக்கிறது.