மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல கோரி எம்பியிடம் மனு
கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள் கிரயம் செய்து தருவதாகக் கூறிவிட்டு அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்றுள்ளார். இந்நிலையில், நில தரகர் ஆர்.எஸ்.ராஜா, ரூ.96 லட்சத்தைத் திரும்ப பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்தபோது, அதனைப் பெற மறுத்ததாகவும், நிலம்தான் வேண்டுமென்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆர்.எஸ். ராஜா, அ.தி.மு.க பிரமுகரும், கரூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவருமான பாலமுருகன் (வயது 52) என்பவரை அணுகி பிரச்னையை முடித்து தரும்படி கூறியுள்ளார்.

அதன்படி, கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ரகுநாதர் என்பவர் மூலம் ரூ. 96 லட்சத்தை பிரின்ஸ் கிப்ஸனிடம் வழங்குவதற்காக பாலமுருகனிடம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக, வழக்கறிஞர் ரகுநாதன் பாலமுருகனைப் பலமுறை தொடர்பு கொண்டபோது, தனது அரசியல் செல்வாக்கை வைத்து, 'பணம் கொடுக்க முடியாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்' என மிரட்டியதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் அ.தி.மு.க பிரமுகர் பாலமுருகன் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
"தி.மு.க-வினர் தூண்டுதல் பேரில், அ.தி.மு.க பிரமுகர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாலமுருகன் வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்க ஒப்புக்கொண்டார். புகார் கொடுத்தவரும் பணத்தைப் பெற்று பிரச்னையை முடித்துக் கொள்ளத் தயாராக இருக்கும்பொழுது காவல்துறை உள்ளே நுழைந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதால் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் வாங்கல் காவிரி ஆற்றில் காவல்துறை உதவியுடன் மணல் கொள்ளை நடைபெறுகிறது. கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நான் உட்பட என்னுடன் அமர்ந்திருப்பவர்களும் தி.மு.க-வினர் தூண்டுதல் பேரில், பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பி உள்ளோம்.
நீதிமன்றம் வார விடுமுறை நாளில் அ.தி.மு.க-வினரைக் கைது செய்வது ஒன்றும் கரூர் மாவட்டத்தில் புதிதான நடவடிக்கை அல்ல. இது போன்ற அரசியல் நாங்களும் செய்வோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்" என்றார்.