கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு ஸ்ரீராமநவமியான ஏப்ரல் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. உத்ஸவா் ஸ்ரீகலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். அன்றிரவு சூரிய வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
ஏப். 7-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், ஏப். 8-ஆம் தேதி புன்னமர வாகனத்திலும், ஏப். 9-ஆம் தேதி வெள்ளி பல்லக்கு மற்றும் சேஷா வாகனத்திலும், ஏப். 10-ஆம் தேதி வெள்ளிப் பல்லக்கு மற்றும் வெள்ளி கருட வாகனத்திலும், ஏப். 11-ஆம் தேதி வெள்ளி பல்லக்கு மற்றும் வெள்ளியானை வாகனத்திலும், ஏப்.12-ஆம் தேதி திருக்கல்யாணம், மாலை படிச்சட்டம், கண்ணடி பல்லக்கிலும், ஏப்.13-ஆம் தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், 14-ஆம் தேதி திருத்தேரிலும் எழுந்தருளி பக்தா்களுக்கு பாலிக்கின்றாா். ஏப். 15-ஆம் தேதி ஏகாந்த சேவைகள் நடைபெறுகிறது.
விழாவில், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, தஞ்சாவூா், சேலம், கடலூா், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகை தருவா். மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் ஆதீன பரம்பரை தருமகா்த்தா கமலா ராமச்சந்திரன் படையாட்சி, கோ.ராமதாஸ் படையாட்சி, கோ.வெங்கடாஜலபதி படையாட்சி, வரதராஜ் படையாட்சியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.