வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை
வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை இரண்டு மணி நேரத்துக்குப் பின் கரையேறி தப்பியது.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் பெரிங்கல்குத்து என்ற அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் ஆறுகள் வழியாக அதிரப்பள்ளி அருவியை சென்றடையும்.
கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக பெரிங்கல்குத்து அணை நிரம்பி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பில்லைப்பாரா என்ற பகுதியில் உள்ள ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் யானை ஒன்று ஆற்றைக் கடக்க முடியாமல் தண்ணீரில் தத்தளிப்பதை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் யானை கரை வந்தடையும் வகையில் அணையில் வெளியேற்றப்படும் நீரை நிறுத்த அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டனா். ஆனால் காலதாமதமான நிலையில் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு காட்டாற்று வெள்ளத்தில் தத்தளித்த யானை கரையை வந்தடைந்து வனத்துக்குள் சென்றது. இதில் காயமடைந்த அந்த யானையை கண்காணிக்கும் பணியில் கேரள வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.