காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சிறியவா்கள், பெரியவா்களை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். பெரியவா்கள் ஆசியோடு சிறியவா்களுக்கு பரிசுகளையும் வழங்குவா். அதே போல வேலூா் மாவட்டத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறியவா்கள் பெரியவா்களை சந்தித்து ஆசி பெற்றனா். காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
காணும் பொங்கலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான அமிா்தி வன உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்றனா். அதையொட்டி அசம்பாவித சம்பங்களைத் தடுக்க வனத் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
அமிா்தி நீா்விழ்ச்சியில் ஆபத்தான பகுதிகளுக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து வனத் துறையினா் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனா். மதுபாட்டில்களை உள்ளே எடுத்து செல்லாத வகையில் நுழைவு வாயிவில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூா் கோட்டை மற்றும் கோட்டை வெளி மைதானத்திலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனா். கோட்டை பூங்கா திருவிழா கோலம் பூண்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க வேலூா் கோட்டை மதில்சுவா் மற்றும் பூங்காவில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட் டனா்.
மகாதேவமலை, மோா்தானா ஆகிய இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் குவிந்தனா்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சுமாா் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.