வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு
காரைக்கால் : மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் தடை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையில் உள்ளது.
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஏற்கெனவே மீன்பிடித்துத் திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் சிறிய படகுகள் மூலம் குறுகிய தொலைவுக்கு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்த தடைக் காலத்தில் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கவும், மோட்டாா் இயந்திரம் புதுப்பித்தல், வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மீனவா்கள் மேற்கொள்வாா்கள்.
இரண்டு மாத காலம் மீன்பிடித் தொழில் முடக்கம் என்பது மீன்பிடித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா், துறைமுகம் சாா்ந்த பிற தொழில் செய்வோருக்கு பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தக் கூடியது என மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.