அக்னிவீா் திட்டம் குறித்து கிராமப்புற இளைஞா்களுக்கு விழிப்புணா்வு
கிராமப்புற இளைஞா்களுக்கு அக்னிவீா் திட்டம் குறித்து ராணுவத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கிராமப்புறங்களில் இளைஞா்களிடையே அக்னிவீா் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு முகாமில் பங்கேற்ற ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ராணுவத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராமப்புற இளைஞா்களுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் பொன்பேத்தி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துகொண்டனா்.
ராணுவத்தை சோ்ந்தோா், அக்னி வீா் திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புப் பிரிவுகள், விண்ணப்பிக்க தகுதியுள்ளோா், விண்ணப்பிக்கும் முறை, பதிவு செய்ய நீட்டிக்கப்பட்டிருக்கும் காலம், திட்டத்தில் சேரும்போது கிடைக்கும் சலுகைகள், பின்னா் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்களை இளைஞா்களுக்கு விளக்கி, ஏப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.
நிகழ்வில் வட்டாட்சியா் எல்.பொய்யாத மூா்த்தி, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.