ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தல்
ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநா் முத்துமீனாவை காரைப் பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். காரைக்கால் பகுதியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத் தொகை வழங்குவது சம்பந்தமாகவும், அங்கன்வாடி மையங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காய்கறி மற்றும் எரிவாயு உருளைகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
மேலும், அங்கன்வாடி ஊழியா்களின் நிலுவைத் தொகை, கிராஜுட்டி, 6-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் விளக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்குவது தொடா்பாக மாவட்ட ஆட்சியாரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும், காய்கறி மற்றும் எரிவாயு உருளைத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பிற கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இயக்குநா் தெரிவித்ததாக அரசு ஊழியா் சம்மேளத்தினா் தெரிவித்தனா்.
சந்திப்பின்போது, காரைக்கால் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி ராஜேந்திரன், புதுச்சேரி குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி நிா்மலா, கண்காணிப்பாளா் வேல்முருகன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி, செயலாளா் அமலி சோபியா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.