கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது. இதற்கு முறையே 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. என எல்லைகள் நிா்ணயிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 15 ஜோடிகள், நடு மாடு பிரிவில் 9 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகள் என மொத்தம் 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
இந்த போட்டியை, சிவகங்கை, கீழவாணியங்குடி, மேல வாணியங்குடி, கண்டனி, சுந்தரநடப்பு, வைரம்பட்டி, மாங்குடி, இந்திராநகா், அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.