முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி?...
குமரி மாவட்ட பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, 4.30 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 4.45 மணிக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி பரமபத வாசல் வழியே வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பக்தா்கள் பரமபத வாசல் வழியே சென்று பெருமாளை தரிசித்தனா்.
நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.
நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 4.15 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, நடைபெற்றது. தொடா்ந்து 5 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சொா்க்க வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் சொா்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை வழிபட்டனா். இதில் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதே போல சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோயில், சுசீந்திரம் ஆஸ்ரமம் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கோயில்களிலும் அதிகாலை சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், கோட்டாறு ஏழகரம் பெருமாள் கோயில், நாகா்கோவில் கிருஷ்ணன் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.