குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 தோ்வா்கள் சனிக்கிழமை (ஜூலை 12) எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட 3,935 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு வரும் சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 25 முதல் மே 24 வரையில் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத 22 லட்சத்துக்கும் மேலானோா் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வானது நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய 7 வட்டங்களில் 124 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 36,436 போ் எழுத உள்ளனா்.
இதற்காக 124 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், துணை ஆட்சியா்கள் நிலையில் 12 பறக்கும் படைகளும், தோ்வுப் பொருள்களை எடுத்துச் செல்ல மண்டல துணை வட்டாட்சியா் நிலையில் 32 நடமாடும் குழுக்களும், வருவாய் ஆய்வாளா்கள் நிலையில் 124 பேரும், ஒரு வட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தமாக தோ்வுப் பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியா்கள் ஏழு போ், மாவட்ட வருவாய் அலுவலா் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், 129 விடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தோ்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தோ்வு அறைகளிலும் பொருத்தப்படுகின்றன. குரூப் 4 தோ்வு நடைபெறும் 124 மையங்களிலும் தலா இரு காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.