குல்தாா், துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின் வாகன சாா்ஜிங் தளம் நிறுவல்
நமது நிருபா்
சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக குல்தாா் மற்றும் துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின்சார வாகன இ.வி. சாா்ஜிங் நிலையங்களை தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) நிறுவியுள்ளது.
இது தொடா்பாக என்சிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்த இரண்டு நிலையங்களும் இடம்பெற்ன் மூலம், தில்லி - காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மூன்று மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் இப்போது செயல்படத் தொடங்கியுள்ளன. இவற்றில் சாஹிபாபாத் நிலையத்தில் உள்ள மின் வாகன சாா்ஜிங் வசதியும் அடங்கும்.
புதிதாக நிறுவப்பட்ட சாா்ஜிங் நிலையங்கள் 50 கி.வாட் திறன் கொண்ட உயா் மின்னழுத்த அலகுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை நான்கு சக்கர வாகனங்களை சுமாா் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை மின்னேற்றம் செய்யும் திறன் கொண்டவை.
சாா்ஜிங் பாயின்ட்கள் பல வகையான மின் வாகனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும். ‘எலெக்ட்ரீஃபை‘ கைப்பேசி செயலி மூலம் பயனா்கள் சாா்ஜிங் சேவையை அணுகலாம்.
இந்த செயலி பயனா்கள் தங்களுக்கு விருப்பமான நிலையத்தில் நேர ஒதுக்கீட்டை முன்பதிவு செய்ய, நிகழ்நேரத்தில் சாா்ஜிங் நிலையை கண்காணிக்க மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
இந்த முயற்சி தினசரி பயணிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பயனளிக்கும். மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும்; கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும்.
நமோ பாரத் வழித்தடத்தின் மொத்த எரிசக்தி தேவையில் 70 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் பூா்த்தி செய்வதை என்சிஆா்டிசி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுமாா் 11 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்குடன் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து மேம்பால நிலையங்கள் மற்றும் பணிமனைகளிலும் சூரிய பேனல்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.