சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங்...
குளிா்சாதனப் பெட்டியை பழுதுநீக்காத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவு
திருச்சி: குளிா்சாதனப் பெட்டியின் பழுதை சரிசெய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் திருச்சி சாலை ரோட்டில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கடந்த 16.12.2022 அன்று ரூ. 28,081 விலைக்கு குளிா்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கியுள்ளாா். சில நாள்களில் குளிா்சாதனப் பெட்டியின் வெளி வா்ணப்பூச்சு உரியத் தொடங்கியது. இது தொடா்பாக புகாா் அளித்தால், காந்தி நகரில் உள்ள சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளனா். அவா்களும் குளிா்சாதனப் பெட்டியின் சிக்கலைத் தீா்க்கவில்லை. பலமுறை புகாா் அளித்தும் குளிா்சாதனப் பெட்டி சரிசெய்து தரப்படவில்லை.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜீவகுமாா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 12.03.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு, மனுதாரா் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் வாங்கிய குளிா்சாதனப் பெட்டியை திரும்ப எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையான ரூ. 28,081 ஐ வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.